தாருக வனத்து முனிவர்கள் சிவபெருமான் மீது புலியை ஏவி விட்டனர். சிவபெருமான் அந்தப் புலியைக் கொன்று அதன் தோலை இடையில் ஆடையாக உடுத்திய தலம் என்று தல வரலாறு கூறுகிறது.
மூலவர் 'பால்வண்ணநாதர்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பாள் 'தவள வெண்ணகையாள்' என்னும் திருநாமத்துடன் அழகாகக் காட்சித் தருகின்றாள்.
இராமபிரான், சீதை, இலட்சுமணன், வசிஷ்டர், தௌமிய முனிவர், அருச்சுனன், மலையத்துவஜன் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். இவர்கள் வழிபட்ட லிங்கங்கள் பிரகாரத்தில் உள்ளன.
இக்கோயிலில் மிகப்பெரிய 'நெற்கலம்' ஒன்று உள்ளது. ஆனால் சரியாகப் பராமரிக்கப்படாமல் உள்ளது. பாதுகாக்கப்பட வேண்டிய அரிய வரலாற்றுச் சின்னம் இது.
திருப்பாலைத்துறையும், பாபநாசமும் அருகருகே உள்ள ஊர்கள். பாபநாசத்தில் 108 சிவாலயம் ஒன்று உள்ளது. சாலையோரக் கோயில்.
திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|